காத்திருந்த காலங்கள்...................காலை தினம் பத்து மணிக்கு
வருவாய் என எதிர்பார்த்து,
காத்திருந்த காலங்கள்
திரும்பத் தான் வாராதா.

கடிகாரம் காட்டும் மணி
சரி தானா என்று நான்,
நொடிக்கு நூறு முறை அம்மாவை
நச்சரித்தவை நினைவில் மட்டும்.

பத்து மணி ஆனவுடன்
பதைபதைத்து வாசல் வந்து,
அவள் வந்துவிட்டால் வசந்தம் தான்
வாராவிடில் ஏமாற்றம்.

சித்தி அத்தை மாமி மாமன்
பாட்டி தாத்தா என பலரும்,
அனுப்பி வந்த கடிதங்கள்
நின்று போயின காலத்தால்.

ஹலோ ஹலோ என்று சொல்லி
அரை மணிக்கொரு முறை பேசினாலும்,
கடிதத்தில் முகம் பார்த்து எழுத்துக்களில்
மனமறிந்து இருந்ததொரு காலம் தான்,

விஞ்ஞானம் வளர்ந்துவிட
மனிதன் எழுதுவதே மறந்து வர,
காலத்தின் சக்கரத்தில்
சிக்கி இறந்து வரும்
கார்டு , கடுதாசி ப்ற்றி
இனி காவியங்கள் தான் பேசும்.